ADVERTISEMENT

சூதாட்ட விவகாரம்...நாராயணசாமி - கிரண்பேடி மீண்டும் மோதல்...!

12:37 PM Dec 28, 2019 | Anonymous (not verified)

கேசினோ எனப்படும் சூதாட்ட கிளப்புகளை தொடங்க புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, "சூதாட்ட கிளப்புகளை திறப்பது, மதுபான கடைகளை திறப்பது, லாட்டரி விற்பனையை தொடங்குவது இவைகள் தான் புதுச்சேரியின் வளர்ச்சியா? இதுதான் மக்கள் நலனா? இதுவே ஏழைகளுக்கானது என அழைக்க வேண்டுமா? இதுகுறித்து முதல்வர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் இது போன்ற வணிகம் எதையும் விரும்பவில்லை" என சமூகவலைதளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



இதற்கு நேற்று செய்தியாளர்களிடையே பதில் அளித்த முதல்வர் நாராயணசாமி, புதுவை மாநிலத்துக்கு சுற்றுலா வருபவர்கள் என்ன விரும்புகிறார்களோ? அதை செய்துகொடுப்போம். இங்கு கேசினோவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இதே கவர்னர் கிரண்பெடி பாரதீய ஜனதா ஆட்சி நடக்கும் கோவா மாநிலத்துக்கு சென்று எதிர்ப்பு தெரிவிப்பாரா? பல்வேறு மாநிலங்களில் இது போன்ற செயல்பாடுகள் உள்ளன. ஒரு திட்டம் வந்தால் அதற்கு தேவையான கட்டுப்பாடுகளை விதிப்போம். கவர்னர் கிரண்பெடி புதுவை மாநிலத்தின் வருமானத்தை பெருக்க என்ன செய்தார்? இதுபோன்ற கவர்னர் புதுச்சேரிக்கு தேவையா?" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கிரண்பேடி, சமூகவலைதளத்தில் "புதுச்சேரி மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் சூதாடுவது கஷ்டப்பட்ட பணத்தை தொலைப்பதை புதுச்சேரி மக்கள் யாரும் விரும்பவில்லை. அவர்களது குழந்தைகளும் தவறான வழியில் போகக் கூடாது என்று புதுச்சேரி மக்கள் நினைக்கின்றனர். எண்ணி பாருங்கள், நிர்வாகத்தில் உள்ள நாங்கள் முதல்வர் மற்றும் கேபினட்டில் உள்ள சில அமைச்சர்கள் சொல்வதை கேட்டு கேசினோ சூதாட்டம், லாட்டரி கம்பெனி, பீர் உற்பத்திக்கு திறந்த மார்க்கெட்டில் பயணித்தால் மாணவர்கள் எல்லோரும் சூதாட்டம், பீர் குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிடுவர்.

இதனால் புதுச்சேரியின் ஆன்மிகம், சமூக பொருளாதாரம் பாதிப்படையும். அத்துடன் மாநிலம் முழுவதும் உள்ள புதுச்சேரியின் சுத்தமான சுற்றுலா என்ற சூழல் மாசுப்படுத்தப்பட்டு இருக்கும். இதுமட்டுமின்றி வரும் சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர். ஒரு சில ஆண்டுகளில் நம்முடைய ஆன்மிகம், சமூக பொருளாதாரம் சுத்தமாக மாறி போய் இருக்கும். இதனால் ஒரு சிலர் தான் பயனடைந்து இருப்பர். சூதாட்டம் என்ற ஓநாய் சமூக மாசுபாட்டை புதுச்சேரி மக்கள் எப்போதும் தள்ளியே வைத்துள்ளனர். எந்த ஒரு காலத்திலும் இது போன்ற ஓநாய்கள் தவறி கூட வளர்ச்சி என்ற பெயரில் உள்ளே வரக்கூடாது. சமூக, ஆன்மிக, ஆரோக்கியத்திற்காக எப்போதும் விழிப்போடு இருப்பது தான் சாலச்சிறந்தது" என பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT