ADVERTISEMENT

பிரதமர் மோடியை கடுமையாக சாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

08:03 PM Mar 14, 2024 | prabukumar@nak…

சென்னை தங்க சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், வடசென்னை பகுதிக்கு விரிவான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் 11 துறைகளை உள்ளடக்கி 4181.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக முதற்கட்டமாக 87 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.3.2024) தொடங்கி வைத்தார். எஞ்சியுள்ள திட்டப் பணிகள் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். மேலும் வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கான இலச்சினையை வெளியிட்டார். முன்னதாக வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

ADVERTISEMENT

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திமுக அரசு சென்னையை உயர்த்த நாள்தோறும் புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை எப்படி வெள்ளத்தில் முழ்கியது. சென்னை மட்டுமா. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிதிநிலைமையும் மூழ்கடித்துவிட்டு சென்றார்கள். அவர்களைப் போன்று தான் 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியும் சென்னைக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், நாளைக்கு (15.03.2024) பிரதமர் மோடி கன்னியாகுமரி வரப்போகிறார். எதற்காக வரப் போகிறார்?. தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கித் தர வரப் போகிறாறா? இல்லை. ஓட்டு கேட்டு வரப் போகிறார். ஓட்டு கேட்டு வருவதை நான் தவறு என்று சொல்ல விரும்பவில்லை.

ADVERTISEMENT

சென்னை வெள்ளத்தில் மிதந்த போது, மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்த போது மக்களைப் பார்க்க வராத பிரதமர், ஒட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமாக இருக்கிறதா?. குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பார்த்தாரே. மறுநாளே, நிவாரண நிதி கொடுத்தாரே. குஜராத்திற்கு ஏன் கொடுத்தீர்கள் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்கு ஏன் தரவில்லை என்று தான் கேட்கிறேன். குஜராத்துக்கு அன்றைய தினமே நிதி தருவதும், தமிழ்நாட்டிற்கு மூன்று மாதம் சென்ற பிறகும் நிதி தர மனதில்லாமல் போவதும் ஏன்? இதை கேட்டால், நம்மை பிரிவினைவாதி என்று அடையாளம் காட்டுகிறார்கள். நம்மை பிரிவினைவாதி போல் பேசுகிறார்கள். பிரதமர் மோடி அவர்களே பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம். நான் அழுத்தம் திருத்தமாக சொல்வது, தேசபக்தியை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டியது அவசியம் இல்லை. நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், பி. கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி. வி. கணேசன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, இரா. கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி. சேகர், தாயகம் கவி, இ. பரந்தாமன், ஜான் எபிநேசர், அ.வெற்றியழகன், ஐட்ரீம் மூர்த்தி, ஜோசப் சாமுவேல், சென்னை துணை மேயர் மு. மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT