ADVERTISEMENT

குடி தண்ணீர் தொட்டியில் நாச வேலை செய்த சிறுவர்கள் கைது!  

02:56 PM Jul 15, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரணம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 162 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு பள்ளி வகுப்பறை முன்பு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த அலங்காரச் செடிகள் உடைக்கப்பட்டும், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட அழகுச் செடிகள் உடைந்தும் காணப்பட்டன. இதனை ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் பார்வையிட்டனர். மேலும், ஆசிரியர்கள் கழிவறைக்குச் சென்று பார்த்தபோது அதன் பூட்டு உடைக்கப்பட்டு அதனுள் இருந்த பினாயில், கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட் உள்ளிட்ட பாட்டில்கள் மாயமாகி இருந்தன.

பள்ளி வளாகத்தில் இருந்த 3 குடிநீர்த் தொட்டிகளைப் பார்த்த போதும், அதன் தண்ணீரைப் பிடித்துப் பார்த்த போதும் அதில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேசுராஜ், சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் சொன்ன சிறுவர்களைப் பிடித்து விசாரித்ததில், 4 சிறுவர்கள் குடிநீர்த் தொட்டியில் பினாயில், கழிவறையைச் சுத்தம் செய்யும் திரவம், பாத்திரங்கள் கழுவப் பயன்படும் சோப்பு ஆகியவற்றைக் கலந்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களைப் பிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுவர்கள் இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புகள் படித்து பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் சுற்றிக் கொண்டு திரிந்ததாகவும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் திட்டியதால் கோபத்தில் இந்த செயலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்த சிந்தாமணிபட்டி காவல் நிலைய போலீசார் 3 சிறுவர்களைத் தான்தோன்றி மலையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆஜர்படுத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT