ADVERTISEMENT

"என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்துள்ளது"- ராகுல்காந்தி பேச்சு!

07:50 PM Feb 28, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (28/02/2022) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், கலந்துக் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை வெளியிட்டார். அதனை தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய ராகுல்காந்தி, "மு.க.ஸ்டாலினுக்கு 69 வயது என்பதை எனது அன்னை நம்பவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு 58 முதல் 60 வயதுக்குள்தான் இருக்கும் என்று எனது அன்னை கூறினார். கூகுளில் பார்த்த பிறகு தான் மு.க.ஸ்டாலினுக்கு 69 வயது என நம்பினார் என் அன்னை. தங்களின் இளமைத்தோற்றம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னோரு புத்தகம் எழுத வேண்டும். என்னுடைய ரத்தம் தமிழக மண்ணில் கலந்திருப்பதால் நானும் தமிழர் என்றேன். நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது என்னை அறியாமல் நான் தமிழர் என்று கூறினேன்.

நானும் தமிழர்தான் எனக் கூறியதை எப்படி என எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். தமிழர் என்று அழைத்துக் கொள்ள எல்லா உரிமையும் இருப்பதாக நான் உணர்ந்தேன். தமிழக வரலாறு, பாரம்பரியத்திற்கு தலை வணங்குபவனாக நான் இங்கு வருகின்றேன். மாநிலங்களில் இருந்தே இந்தியா வருகிறது என்று அழுத்தமாகக் கூறினேன். பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் பொருள் புரியாமல் பேசுகிறார். எதையும் புரிந்துக் கொள்ளாமல் தமிழகத்தைப் பற்றி எப்படி பேசுகிறார் பிரதமர்?

தமிழக வரலாறு மட்டுமின்றி இந்தியாவின் வரலாற்றையும் அவர்கள் தெரிந்துக் கொள்ளவில்லை. எழுத்து, சொற்கள், வாக்கியத்தை மதிக்கவில்லை எனில் வேறு எதையும் மதிக்க முடியாது. எந்த மாநிலத்தைப் பற்றியும் புரிந்துக் கொள்ளாத தன்மையில்தான் இருக்கிறார் பிரதமர். மக்களின் குரலைப் புரிந்துக் கொள்ளாமல், மக்களுக்காக எப்படி பேச முடியும்? தமிழ்நாடு என்பது வெறும் சொல் அல்ல, தமிழ்நாடு என்பது நிலம். ஜம்மு- காஷ்மீர் மக்கள் தங்களைத் தாங்களே ஆள முடியாத சூழல் உள்ளது. ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாநிலத்திடம் இருந்து கற்றுக் கொள்கிறது.

இந்தியா எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க நீங்கள் யார்? தீர்மானிக்க வேண்டியது மக்கள் தான். நீதித்துறை, தேர்தல் ஆணையம், பத்திரிகைத்துறைத் தொடர்ந்து திட்டமிட்டு நசுக்கப்படுகின்றது. கற்பனையான உலகில் பா.ஜ.க. வாழ வேண்டாம், அவர்களை எதிர்கொள்ள எங்களுக்கு தெரியும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்" ராகுல்காந்தி.

விழாவில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் மற்றும் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துக் கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT