ADVERTISEMENT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை! 

07:43 AM Jul 02, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல்லில் நாளை, நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுவதையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 2) மாலை நாமக்கல் வருகிறார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடக்கிறது. நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள பொம்மைக்குட்டை பகுதியில் இம்மாநாடு நடக்கிறது.

இதற்காக பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நாளை (03/07/2022) காலை 09.30 மணிக்கு மாநாட்டைத் துவக்கி வைக்கிறார். மாலை 05.30 மணி வரை மாநாடு நடக்கிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., வரவேற்புரை ஆற்றுகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்கிற தலைப்பில் ஆ.ராஜா பேசுகிறார். தி.மு.க. உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி., திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுதான் திராவிட இயக்கம் என்கிற தலைப்பில் சுப.வீரபாண்டியன், பெண்ணின் கையில் அதிகாரம் என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகின்றனர்.

தி.மு.க.வின் வரலாற்றுச் சுவடுகள் பற்றிய காட்சித் தொகுப்பு மாநாட்டில் திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மதியம் 02.30 மணி முதல் 03.30 மணி வரை மக்களோடு நில்; மக்களோடு வாழ் என்ற தலைப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகிறார். இதையடுத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பேசுகின்றனர்.

மாலை 04.00 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். அமைச்சர் மதிவேந்தன் நன்றி கூறுகிறார். இதையொட்டி, சனிக்கிழமை (ஜூலை 2) மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் வருகிறார். கரூர் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பரமத்தி வேலூர் வழியாக நாமக்கல் வருகிறார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாளிகையில் இன்று (02/07/2022) இரவு முதலமைச்சர் தங்கி ஓய்வெடுப்பதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

முதலமைச்சர் வருகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT