ADVERTISEMENT

ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

01:19 PM Aug 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆரோக்கியமான குழந்தைகளே, நாட்டின் வளமான எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், மாநில அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம் என்றும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் செயல்படுத்திட அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அறிவித்தார்.

இத்திட்டமானது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து 6 வயத்திற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து, கடுமையாக மற்றும் மிதமான குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் வகையில் "ஏற்றமிகு ஏழு திட்டங்கள்" கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் மூலம் பயன்பெற்ற வருண் (வயது 4), நுசாய்பா (வயது 2) மற்றும் சாய்திரன் (வயது 2.5 ) ஆகிய குழந்தைகளின் பெற்றோர்களிடம் அக்குழந்தைகளின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார். இந்த நிகழ்வின்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “ பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்குச் செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம்தான் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தத் திட்டம் பெரும் வெற்றி அடைந்துள்ளது பற்றிய ஒரு சிறப்புக் காணொளி ஒன்றையும் அதில் இணைத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT