Attention of owners of houses damaged by rain and flood 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் புயல், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புறபகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளைப் பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக நிவாரணம் வழங்குதல் தொடர்பாகத்தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.

இவ்வாறு மழை வெள்ளத்தினால் பகுதியாகச் சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்கு ரூ. 2 இலட்சம் வரையும் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ. 4 இலட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாகச் சேதமடைந்த 955 வீடுகளுக்குப் பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ. 45.84 கோடி வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.