ADVERTISEMENT

மதங்களைக் கடந்த மாசிமகத் திருவிழா; சிதம்பரத்தில் கோலாகலம்

10:40 AM Mar 08, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் கிள்ளையில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மேளதாளம் முழங்க கிள்ளை கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும். இந்த நிலையில், நேற்று கிள்ளையில் மாசிமக விழா நடைபெற்றது.

கிள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான சுவாமி சிலைகள் கிள்ளை கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. மாசிமகத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பலர் கடலில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்தனர். ஆண்டுதோறும் கிள்ளை மாசிமகத் திருவிழாவிற்கு ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி தீர்த்தவாரிக்கு வருவது வழக்கம். அதேபோல் செவ்வாயன்று ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கடற்கரைக்கு வழக்கம்போல தீர்த்தவாரிக்கு வந்தது. கிள்ளை தைக்கால் பகுதியில் தர்கா டிரஸ்ட் நிர்வாகி சையது சக்காப் தலைமையில் ஏராளமான இஸ்லாமியப் பிரமுகர்கள் வரவேற்பளித்து பட்டு சாத்தினார்கள்.

பின்னர் பூவராக சாமி எடுத்து வந்த பிரசாதத்தை அதே பகுதியில் இருந்த தர்காவிற்கு அனைவரும் சென்று உலக நன்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாத்தியா ஓதப்பட்டது. அனைவருக்கும் பிரசாதமாக எடுத்து வரப்பட்ட சர்க்கரை வழங்கப்பட்டது. தர்காவில் பாத்தியா ஓதிய பொருட்கள் ஸ்ரீமுஷ்ணம் சாமி கோயில் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், பேரூராட்சி உறுப்பினர்கள், செயல் அலுவலர்கள் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோயில் செல்வமணி, சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் ராஜ்குமார், விவசாய சங்க தலைவர்கள் ரங்கநாயகி, கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கிள்ளை தர்கா டிரஸ்டி நிர்வாகி சையது சக்காப் கூறுகையில், இந்த நிகழ்வு எங்களது முன்னோர்களால் கடந்த 1892 ஆம் ஆண்டு முதல் செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நாங்களும் செய்து வருகிறோம். பூவராக சாமி வரும்போது மேளதாளங்களுடன் வரவேற்று அவர்கள் எடுத்து வரும் பிரசாதத்தை பெற்றுக்கொண்டு அதனை தர்காவில் வைத்து பாத்தியா ஓதி இந்த நாட்டில் அனைவரும் சுபிட்சமாக இருக்கும் வகையில் அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டு அதனை மீண்டும் சாமியிடம் வழங்குவோம் அதனைப் பெற்றுக்கொண்டு சாமி கடற்கரைக்கு செல்வார். கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும் திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன் கூறுகையில், "இது நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் மதம் கடந்த மாசிமகமாக கிள்ளையில் நடைபெற்று வருகிறது. இதனை கிள்ளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரவேற்று வழி அனுப்பி வைப்பதில் பெருமை கொள்கிறோம்" எனக் கூறுகிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT