ADVERTISEMENT

"தாலியை லஞ்சமாக வாங்கிக் கொண்டு இறப்புச் சான்றிதழை தாருங்கள்" - அதிகாரிகளிடம் கதறிய பெண் 

05:32 PM May 16, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திற்கு உட்பட்ட இளநீர் குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி திலகவதி. இவரின் தந்தை பரசுராமன் சில மாதங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார். அவரது இறப்புச் சான்றிதழ் கேட்டு செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் வழியாக மனு தந்துள்ளார் திலகவதி. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றோர் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை வட்டாட்சியருக்கு அனுப்பி உள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம் அதன் மீது நடவடிக்கை எடுத்து இவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கி இருக்க வேண்டும். இதெல்லாம் 30 நாட்களில் நடந்து முடிந்து இருக்க வேண்டும். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இறப்புச் சான்றிதழ் வழங்காமல் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் அலைக்கழித்துள்ளனர்.

இதனால் அதிருப்திக்கு ஆளான திலகவதியிடம் பணம் தந்தால்தான் வேலை சீக்கிரம் முடியும் என அங்கிருந்த இடைத் தரகர்கள் கூறியுள்ளனர். என்னிடம் பணம் இல்லை நான் கூலி வேலைக்கு செல்பவள் என சொல்லி உள்ளார். பணம் தராததால் சான்றிதழ் கிடைக்காமல் இருந்து வந்தது. கடந்த மே 11 ஆம் தேதி தனது தாலியை கழட்டி ஒரு பேப்பரில் மடித்து வைத்து அதிகாரிகளிடம் சென்று என்னிடம் பணம் இல்லை. அதற்கு பதில் என் தாலியை தருகிறேன். லஞ்சமாக நீங்கள் வாங்கிக் கொண்டு இறப்புச் சான்றிதழை தாருங்கள் எனக் கேட்டுள்ளார்.

அந்தப் பெண்மணியின் சார்பாக சிலரும் பேசி கேட்டபோது, அங்கிருந்த அதிகாரிகள் இதில் சிக்கல் உள்ளது. தடை உள்ளது என ஏதேதோ காரணங்கள் சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த செய்யாறு சப் கலெக்டர் அனாமிகா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையின் முடிவின்படி செய்யாறு துணை வட்டாட்சியர் வெங்கடேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். அதோடு உடனடியாக திலகவதியின் தந்தையார் இறப்புக்கான சான்றிதழையும் வழங்கி உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT