/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thasildar-art.jpg)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன்(வயது 54). திண்டிவனத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை (வயது 48). இவர்களது மகன் சிவசங்கரன். இவர்கள் மூன்று பேரும், நேற்று முன்தினம் காலை காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்கு வழிபாடு செய்யகாரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். காரை சிவசங்கரன் ஓட்டிச் சென்றுள்ளார்.
காஞ்சிபுரத்தில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மூவரும் ஊருக்குத்திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 10 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம்வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில்,செய்யாறு அருகே நெடுங்கல் கூட்ரோடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது மேல்மருவத்தூரில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி லாரி ஒன்றுசென்று கொண்டிருந்தது.நெடுங்கல் கூட்ரோடு அருகே எதிர்பாராத விதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த தாசில்தார் வெங்கட சுப்பிரமணியனின் தலை, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுசம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவிபூங்கோதை, மகன் சிவசங்கரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்துவிட்டு அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெங்கட சுப்பிரமணியன் உறவினர் விக்னேஸ்வரன் என்பவர் அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கட சுப்பிரமணி உடலை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாசில்தார் வெங்கட சுப்பிரமணியன் விழுப்புரம் வருவாய்த் துறையில் பல்வேறு ஊர்களில் பணியாற்றியுள்ளார். அப்போது பொதுமக்கள், அரசு ஊழியர்களிடம் மிகுந்த அக்கறையோடு பழகி உள்ளார். பொதுமக்களின் கோரிக்கைகள் பிரச்சினைகளை நல்ல முறையில் தீர்த்து வைத்துள்ளார். மேலும் வெங்கட சுப்பிரமணியன் மறைவு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)