ADVERTISEMENT

கோயம்பேடு மார்க்கெட்டை தற்போது திறக்க வாய்ப்பில்லை!- உயர்நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ விளக்கம்!

08:12 AM May 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனைச் சந்தையைத் தற்போது திறக்க வாய்ப்பில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், 1996- ஆம் ஆண்டு முதல் கொத்தவால் சாவடியில் இயங்கிய காய்கறிச் சந்தை கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. 2014- ஆம் ஆண்டு முதல் மொத்த காய்கறி விற்பனை, உரிய அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT


கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஏப்ரல் 24- ஆம் தேதி, 4 நாட்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதனால், காய்கறிகளை வாங்க சில்லறை விற்பனைச் சந்தையில் மக்கள் குவிந்ததால், கரோனா தொற்று பரவியது. அதனால், மே 5- ஆம் தேதி முதல் கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டது.

சில்லறை காய்கறி விற்பனைக்கும், உணவு தானிய விற்பனைக்கும் தொடர்பு இல்லாத நிலையில், அனைத்து வளாகங்களும் மூடப்பட்டதால், சில விற்பனையாளர்களால், உணவு தானிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க, சிறப்பு அதிகாரி, சி.எம்.டி.ஏ, மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வழக்கு, நேற்று (29/05/2020) நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்த போது, சி.எம்.டி.ஏ சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கரோனா தோற்று அதிக அளவில் இருப்பதால் உணவு தானியச் சந்தையைத் தற்போது திறக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். அப்போது, இது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, தேவைப்படும் பட்சத்தில் அந்தக் கடை உரிமையாளர்கள், கடையில் உள்ள பொருட்களை எடுப்பதற்கு, துறை சார்ந்த அதிகாரியை நாடலாம் எனத் தெரிவித்து, வழக்கு விசாரணையை ஜூன் 5- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT