ADVERTISEMENT

சட்டப் பேரவைக்குள் குட்கா: உரிமைக்குழுவின் 2-வது நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி பேரவைச் செயலாளர் மனு தாக்கல்!

12:01 AM Oct 28, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சட்டப் பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக்கோரி, சட்டப் பேரவைச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.



கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக அனுப்பப்பட்ட உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி ரத்து செய்து, ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பி, உரிய விளக்கங்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.



அதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை செப்டம்பர் 24-ல் விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு குறித்து பேரவைத் தலைவர், செயலாளர், உரிமைக்குழு மற்றும் உரிமைக்குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.



இந்த தடையை நீக்கக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சட்டமன்றச் செயலாளர், உரிமைக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சாஹி அமர்வு, இடைக்காலத் தடையை நீக்க மறுத்ததுடன், மேல்முறையீடு மனுக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.



இந்நிலையில், உரிமைக்குழு நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி, தனி நீதிபதி முன்பாக இருக்கும் வழக்கில் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்தது உரிமை மீறலா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்க உரிமைக்குழுவுக்கு சுதந்திரம் அளித்துள்ள நிலையில், நோட்டீஸுக்கு தடை விதித்தது தவறானது என்றும், நோட்டீஸுக்கு ஆஜராகி விளக்கமளிக்க வாய்ப்பளித்துள்ள நிலையில், அதில் ஆஜராகாமல் தொடர்ந்த வழக்கில் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


நோட்டீஸ் மீது தடை விதித்த வழக்கு, நாளை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு விசாரணைக்கு வரும்போது, பேரவைச் செயலாளர் மனு குறித்தும் முறையிட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT