ADVERTISEMENT

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஷால் மேல்முறையீடு! 

11:02 PM Feb 10, 2020 | santhoshb@nakk…

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், தபால் ஓட்டுக்களைப் போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார். நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும். அதுவரையிலும் நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் பல்வேறு சங்கங்கள், பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகள் அதனை நிர்வகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலமுறை தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்தும் சங்கத்தை நிர்வகித்து வந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார். நடிகர் சங்கப் பிரச்சினையில், தமிழக அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டதாகவும் நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் இந்தத் தேர்தலை ரத்து செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு 12- ஆம் தேதி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT