ADVERTISEMENT

“அதெல்லாம் ரகசியம்..” - பல்வீர் சிங்கை காப்பாற்றும் ஐபிஎஸ் லாபிகள்?

11:14 AM Sep 08, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல் பிடுங்கிய விவகாரத்தில் அனைத்து விசாரணையும் முடிந்து இன்னும் பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி, உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் துன்புறுத்தியதாகச் சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக முதலில் சார் ஆட்சியர் விசாரணை, பிறகு ஆட்சியர் விசாரணை என நடந்தது. பின் அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆயுதத்தைப் பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் 4 வழக்குகள் பல்வீர்சிங் மீது பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனால் பல்வீர்சிங் தொடர்பான வழக்குகளில் அனைத்து விசாரணைகள் முடிந்தும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் பல்வீர் சிங் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தினர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “திருநெல்வேலி அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக பணியாற்றிய பல்வீர் சிங் மற்றும் இதர காவலர்கள், பலரது பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்தது மார்ச் மாதம் வெளிவந்தது. ஏப்ரல் மாதம் இந்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 4 வழக்குகள் வரை போடப்பட்டது. ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பல்வீர் சிங் கைதும் செய்யப்படவில்லை.

சிபிசிஐடி விசாரணை முடித்துவிட்டதாகவும் தமிழ்நாடு அரசு உள்துறை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளிப்பதில் தாமதம் இருப்பதாக கேள்விப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அதன் நிலையைக் கேட்டோம். ஆனால் ‘அது ரகசியம்’ என்று கூறி வழக்கின் நிலை குறித்து தகவல் தர முடியாது என்று அரசு பதில் அளித்துள்ளது. இதுபோன்ற அப்பட்டமான வழக்கில் கூட அரசு வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அந்த பதிவில், சில ஐபிஎஸ் லாபியின் அழுத்தமும் அரசுக்கு இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். எனவே அரசு உடனடியாக பல்வீர் சிங் மற்றும் மற்றவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இனியும் தாமதிக்காமல் உடனே சிபிசிஐடிக்கு அனுமதி தரும்படி கோரி இன்று மனு அனுப்பி உள்ளோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT