ADVERTISEMENT

இரும்புப் பெட்டியில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை; ஜாமீனுக்குத் தீவிரம் காட்டும் செந்தில் பாலாஜி தரப்பு

04:57 PM Aug 12, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதையடுத்து செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவின்படி, புழல் சிறையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கடந்த 7 ஆம் தேதி இரவே அழைத்து வரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர், செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கும் தொடர்புடைய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விசாரணை இடையே அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் 5 நாள் காவல் முடிந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை எழும்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3000 முதல் 4000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் என்.ஆர்.இளங்கோ, பிரபல டெல்லி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆகியோர் செந்தில் பாலாஜி வழக்கில் ஆஜராகியுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்டமாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய முடிவு எடுத்துள்ளனர். குறிப்பாக வரும் 16ம் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கின் மூலம் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி குற்றம் செய்ததை உறுதிப்படுத்தி இருக்கின்றோம் என்ற கருத்தை நீதிமன்றத்தில் வைத்துள்ளார்கள். இதனை குற்றப்பத்திரிக்கையாகவும் தாக்கல் செய்துள்ளனர். எனவே பணம் பெற்று மோசடி செய்திருக்கின்றார் என்ற அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு அடிப்படையில் நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளும். ஒருவேளை பெறப்பட்ட பணம் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால் எளிதில் ஜாமீன் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. இன்று 3000 முதல் 4000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைப் பெரிய இரும்பு டிரங் பெட்டியில் வைத்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT