Skip to main content

பரபரப்பு வாதங்கள்; செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

 Senthil Balaji Case; Adjournment to tomorrow

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

 

முன்னதாக, செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்திருந்தார்

 

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். அவர் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று இரண்டு நீதிபதி அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும். எனவே செந்தில் பாலாஜி வழக்கின் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும்” எனத் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா  மேல்முறையீடு செய்திருந்தார்.

 

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். மேலும் நீதிபதிகள் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கையில் எடுத்தபின் நாங்கள் ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும்போது இந்த வழக்கை முடித்து வைக்கலாமே எனக் கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்தார்.

 

 Senthil Balaji Case; Adjournment to tomorrow

 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்த வழக்கு நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மதியம் 2 மணிக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிடுகையில், “அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அப்படி இருக்கையில் அமலாக்கத்துறையினர் எப்படிக் கைது செய்ய முடியும். ஒருவரிடம் விசாரணை செய்து அதன் மூலம் வாக்குமூலத்தைப் பெற்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். அமலாக்கத்துறையால் நேரடியாகக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா? சுங்கத்துறை அதிகாரிகளால் ஒருவரைக் கைது செய்ய முடியுமா? காவல்துறையினர் தான் கைது செய்ய முடியும். இது அமலாக்கத்துறையினருக்கும் பொருந்தும். காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. சட்ட விதிகளின்படிதான் கைது செய்யப்பட்டுள்ளோமா என்பதைக் கருத்தில் கொள்ளவும், அதனை உறுதிப்படுத்தவும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உரிமை உண்டு” என வாதிட்டார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “எவ்வளவு நேரம் வாதிடுவீர்கள்” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கபில் சிபல், “நாள் முழுவதும் தேவை” எனப் பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் வாதத்தை முன் வைக்கையில், “ஆவணங்களைக் கையகப்படுத்துவது, அதனை முடக்குவது தான் அமலாக்கத்துறைக்கு உள்ள அதிகாரம்” எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி போபண்ணா, “அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்தார். அதற்கு கபில் சிபல், “அமலாக்கத்துறையினர் நீதிமன்ற விசாரணைக்குத் தான் அனுப்ப முடியும் எனும்போது எவ்வாறு விசாரணை நடத்த முடியும்” எனத் தெரிவித்தார். அதற்கு, “அமலாக்கத்துறை நேரடியாகக் கைது செய்ய முடியாதா” என செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். இவ்வாறு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கானது நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.