ADVERTISEMENT

ஈரோட்டில் வெவ்வேறு சம்பவங்களில் நிகழ்ந்த உயிரிழப்புகள்; போலீசார் விசாரணை

07:55 PM Oct 27, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு, திண்டல், வித்யா நகரைச் சேர்ந்தவர் திலகவதி (71). இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவரது மகள் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திலகவதி மட்டும் வித்யா நகரில் தனியாக வசித்து வந்தார். அவரை கவனித்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் காந்திமதி என்பவரை திலகவதியின் மகள் நியமித்து இருந்தார். திலகவதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று காந்திமதி ரேஷன் கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. இதையடுத்து, காந்திமதி ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ஃபேன் மாட்டும் கொக்கியில், திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே திலகவதி இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திலகவதியின் மகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு சூரம்பட்டி காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சுரேஷ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் நேற்றும் மது போதையில் வீட்டுக்கு வந்த சுரேஷ், மனைவியையும் குழந்தையையும் அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டு உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கணவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த நித்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள அறையில் சுரேஷ் தூக்குப் போட்டுத் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சுரேஷ் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் எம்.எம்.கே தெருவைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (24). ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தாமரைக்கண்ணனுக்கு வலது காலில் புண் ஏற்பட்டு கடந்த மூன்று மாதமாகியும் ஆறாத நிலையில் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த தாமரைக்கண்ணன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT