ADVERTISEMENT

விவசாயி தாக்கப்பட்ட விவகாரம்; ஊராட்சி செயலருக்கு ஜாமீன்

08:13 PM Oct 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தியன்று தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கடந்த 2 ஆம் தேதி (02.10.2023) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கிருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்தார். அதே சமயம் கூட்டத்தில் இருந்த ராசு என்பவரும் விவசாயியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ மக்கள் மத்தியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட இருவர் மீதும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இந்த சூழலில் தலைமறைவாக இருந்த ராசுவை தனிப்படை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தாக்குதலுக்கு உட்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் இல்லை என்பதால் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்து முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT