ADVERTISEMENT

மான்களை இடமாற்றம் செய்வதற்குத் தடை கோரிய வழக்கு! -மனுவைத் தள்ளுபடி செய்து வனத்துறைக்கு அனுமதி!

03:09 PM Dec 20, 2019 | kalaimohan

சென்னை கிண்டி மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மான்களை வேறு இடங்களுக்கு மாற்ற வனத்துறைக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற வளாகங்களில் உள்ள 1,500 மான்களை வேறு இடத்திற்கு மாற்ற தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மான்களைப் பிடிக்கவும், வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யவும் தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த முரளிதரன் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக வனத்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், நாய்கள் கடிப்பதாலும், வாகனங்கள் மோதுவதாலும்,வேட்டையாடப்படுவதாலும், மான்கள் பலியாவதைத் தடுத்து, இயற்கையான சூழலுக்காக காப்பு காடுகளுக்கும், தேசிய பூங்காக்களுக்கும் மான்கள் விடப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளி மான்கள் இறந்துள்ளதாகவும், மாற்று இடத்திற்கு போகும்போது துன்புறுத்தல் இல்லாமல் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு இடத்துக்கு மாற்றும் முன், கிண்டியில் 15 நாள் பரிசோதனையில் வைக்கப்பட்டு, அதன் பின்னரே மான் பாதுகாப்பான இடமாற்ற விதிகளின் படியே இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள மான்களை இடமாற்றம் செய்ததில் தவறில்லை எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

விலங்குகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக உரிய வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க வனத்துறைக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட மான்களின் நிலை குறித்தும், விலங்குகளை இடமாற்றம் செய்யும் போது அவற்றை எப்படி பிடிக்க வேண்டும் என்பது குறித்து விதிகள் வகுத்தது தொடர்பாக ஜனவரி 21-ல் அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT