ADVERTISEMENT

கோடநாடு வழக்கு; கனகராஜின் சகோதரரிடம் விசாரணை நடத்த அனுமதி

06:26 PM Sep 04, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கோடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கனகராஜை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் கனகராஜ் அழைத்து வந்த கூலிப்படை 10 பேரையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாகச் சில ஆவணங்களை கனகராஜின் சகோதரர் தனபால் அழித்ததாகக் காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இது சம்பந்தமாக, கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, தனபாலை ஜாமீனில் விடுவித்தனர். வெளியே வந்த தனபால், கடந்த மாதம் நில மோசடி வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது செய்தியாளர்கள் வெளியே கூடி நின்றனர். அப்போது அவர், “எனது மகள் இரண்டு பேரையும் முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் தெரிவிக்க உள்ளேன்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்துள்ள தனபால் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “ஓட்டுநர் கனகராஜ் எனது தம்பி; அதனால் என்னையும் விசாரித்தார்கள். சிபிசிஐடி போலீசார் வேண்டும் என்றால் என்னை விசாரிக்கட்டும். நான் முழு ஒத்துழைப்பும் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். கோடநாடு கொலை வழக்கிலும், எனது சகோதரர் மரணத்திலும் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் இன்று வரை அவரை விசாரிக்கவே இல்லை. நான் பெருந்துறைக்குச் சென்றபோது எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில்தான் கோடநாடு பங்களாவிலிருந்து 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 5 பைகளை எடுத்து வந்து இரண்டு பைகளைச் சேலத்திலும், 3 பைகளை சங்ககிரியிலும் உள்ள முக்கிய புள்ளிகளிடம் கொடுத்துள்ளார்.

மேலும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கனகராஜ் தெரிவித்த நிலையில்தான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார். அதில் கனகராஜ் கொடுத்த பைகளில் நிறைய முக்கிய பிரமுகர்கள் பெயர்கள் இருக்கிறது. அதையெல்லாம் நான் காவல்துறையிடம்தான் சொல்ல முடியும்; இப்போது உங்களிடம் சொன்னால் என் உயிருக்குப் பாதுகாப்பிருக்காது. எடப்பாடி காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் என்னிடம் இருந்த செல்போன்களை வாங்கி அழித்துவிட்டார். ஆனால் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று சுரேஷ் குமார் மிரட்டினார். இதையெல்லாம் நான் முன்னாடியே ஏன் சொல்லவில்லை என்றால் அப்போது அதிமுக ஆட்சி இருந்தது. எனக்குப் பயமாக இருந்தால் இதுகுறித்து வெளியே சொல்லவில்லை. ஆனால் இப்போது நடைபெற்றுள்ள ஆட்சி மாற்றத்தால் நான் இவற்றை வெளியே சொல்லுகிறேன். முதல்வர் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு உரிய பாதுகாப்பு முதல்வர் கொடுப்பார் என்று நம்புகிறேன். விரைவில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும்” என்று கூறி இருந்தார்.

இதையடுத்து கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கக் கோரி உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தனபாலிடம் விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி ஏதும் தேவையில்லை. சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரித்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT