ADVERTISEMENT

சாப்பிடச் சென்ற நேரத்தில் தீப்பிடித்த கார்; பதறிய உரிமையாளர்

11:52 PM May 09, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு இடையன்காட்டுவலசில் இன்று கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பில்லூர் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். 39 வயதான இவர் நேற்று மாலை காரில் ஈரோடு இடையன்காட்டு வலசுக்கு வந்துள்ளார். அங்கு ஒரு விடுதியில் தங்கியிருக்கும் நண்பர் சங்கருடன் சந்தோஷ் குமாரும் நேற்றிரவு தங்கி இருந்தார். சங்கருக்கு இன்று வேலைக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதால் சந்தோஷ் குமார் வந்துள்ளார். கார், விடுதியின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை காரை சந்தோஷ்குமார் இயக்க முயன்றார். ஆனால் கார் ஸ்டார்ட் ஆகாததால் மெக்கானிக்குக்கு ஃபோன் செய்து சொல்லிவிட்டு நண்பருடன் சாப்பிடச் சென்றார். அந்த சமயத்தில் திடீரென காரில் இருந்து புகை வெளியேறியது.

பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எறியத் தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 15 நிமிடம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் காரின் முன் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. காரின் எஞ்சினும் சேதம் அடைந்தது. விபத்து நடந்தபோது காரில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் இடையன்காட்டு வலசு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT