ADVERTISEMENT

மாட்டு வண்டி பந்தயத்திற்கு திடீர் தடை; திமுக கொடியை இறக்கிய தொண்டர்கள்

10:33 AM Feb 01, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அம்பதுமேல்நகரம் கிராமத்தில் வரும் மார்ச்.1ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிடும் வகையிலும், தமிழர் திருநாளை போற்றிடும் வகையிலும் தி.மு.க. இளைஞர் அணியினர் மற்றும் கிளை கழகத்தினர் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர்.

போட்டி குறித்தான ஆலோசனைகளை திருவையாறு தி.மு.க. எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரனிடம் பெற்ற பிறகே போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஜனவரி 29 ஆம் தேதி நடத்துவதற்காக கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியே திருவையாறு டி.எஸ்.பி.யிடம் அனுமதி கேட்டு கடிதம் அளித்திருந்தனர். போலீசாரும் ஜன.29ம் தேதி நடத்திக்கொள்ள அனுமதி கிடைத்த பிறகு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு போட்டிக்கான நோட்டீசை திருவையாறு திமுக. எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரனிடம் கொடுத்தனர். இதற்கு எம்.எல்.ஏ.வும் போட்டியை நடத்த அனுமதி கொடுத்துள்ளார். அங்கிருந்து ஆர்வத்தோடு வந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டிக்கான அறிவிப்புகளை கொடுத்தனர். அதன்படி, பந்தயத்தில் கலந்துகொள்ளும் மாடு, மாட்டு வண்டிகளோடு போட்டியாளர்கள் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் அம்பது மேல் நகரத்திற்கு வந்து விட்டனர்.

இந்நிலையில் போட்டிக்கு முதல் நாளான 28ம் தேதி, மாட்டு வண்டி பந்தயம் நடத்தக் கூடாது என போலீசார் தடை உத்தரவிட்டனர். அதிர்ச்சி அடைந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் காவல் நிலையம், எம்.எல்.ஏ அலுவலகம், அவரது வீடு என மாறி மாறி ஓடியதோடு, எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரனை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் பலனளிக்கவில்லை. ஆத்திரமடைந்த அம்பதுமேல்நகரம், அல்லூர் கிராமத்தின் தி.மு.க.வினர் பொது இடங்களிலும், கட்சி அலுவலகத்திலும் ஏற்றப்பட்டிருந்த தி.மு.க.கொடிகளை கம்பத்திலிருந்து இறக்கி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT