ADVERTISEMENT

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்திலிருந்து தலா ரூ.40 ஆயிரம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

08:43 AM Nov 07, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் பணியாற்றிய 3 ஆயிரத்து 528 ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தில் 40 ஆயிரம் ரூபாயை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019- ஆம் ஆண்டு ஜனவரி முதல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த பணியாளர் சங்கம் மற்றும் தமிழ் மாநில ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்குகள், நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை 60 கோடி ரூபாயில் 25 சதவீதமான 15 கோடி ரூபாயை, இந்த வழக்குகளுக்காக உருவாக்கப்பட்ட கணக்கில் செலுத்தப்பட்டதாக பி.எஸ்.என்.எல். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நீண்ட நாட்களாக ஊதியம் முறையாக வழங்கப்படாதது மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு, 15 கோடி ரூபாயை, 3 ஆயிரத்து 528 ஒப்பந்த பணியாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஒவ்வொருவருக்கும் தலா 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை விட நிலுவை ஊதியம் குறைவாக இருந்தால் அதை மட்டும் வழங்கினால் போதும். இந்த நடைமுறையை மேற்கொள்வதற்காக, தொழிலாளர் ஆணையருக்கு உதவுவதற்காக, இந்த விவகாரம் குறித்து முழுமையாக அறிந்த 3 நபர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவிடம், ஒப்பந்த பணியாளர்களின் விவரங்களை முழுமையாக வழங்க வேண்டும் என பி.எஸ்.என்.எல்.-க்கு உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 10, 11, 12 தேதிகளில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு, ஆதாரங்களை சரிபார்த்த பின் ஊதிய தொகையை வழங்கவேண்டுமெனவும், இந்த நடைமுறைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை, நவம்பர் 25- ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT