ADVERTISEMENT

மூதாட்டிக்கு உதவிய சிறுவர்கள்... காவல் ஆய்வாளர் நேரில் வாழ்த்து..!

10:44 AM Jan 07, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


நடக்க முடியாமல் தவித்த மூதாட்டியை ரேஷன் கடையிலிருந்து இழுவை வண்டியில் வைத்து இழுத்துச் சென்று உதவிய சிறுவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தில் தனது மகளுடன் வசிக்கும் 74 வயது மூதாட்டி சுப்புலட்சுமி. சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு வாங்க ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நடக்க முடியாமல் சுமார் 3 மணி நேரம் நகர்ந்து சென்று பணமும் பொருளும் வாங்கினார். அதன்பின் திரும்ப வீட்டுக்குச் செல்ல முடியாமல் சுருண்டு கிடந்த மூதாட்டியை அப்பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன்களான நிதின்(9), நிதிஷ்(9) ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் கிடந்த இழுவை வண்டியில் ஏற்றி படுக்கவைத்து மூதாட்டியின் வீட்டில் கொண்டு போய்விட்டனர்.

சிறுவர்களின் மனிதாபிமானச் செயலை நக்கீரன் இணையத்தில் படங்ளுடன் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்தியைப் பார்த்து பலரும் அந்தச் சிறுவர்களைப் பாராட்டி வருகின்றனர்.


இந்த செய்தியைப் பார்த்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் தனிப்பிரிவு போலீசார், சிறுவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று இனிப்பு வழங்கி பாராட்டியதுடன் ரொக்கப் பரிசுகளையும் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து சிறுவர்கள் கூறும்போது, “அந்தப் பாட்டி ரேஷன் கடையில இருந்து வீட்டுக்கு நடக்க முடியாம மரத்தடியில கிடந்தாங்க. அந்தப் பக்கமா நாங்களும் எங்க அம்மாவும் வந்தோம். எங்கம்மா அவங்கள ஸ்கூட்டியில ஏறச் சொன்னாங்க அந்தப் பாட்டியால ஏறி உக்கார முடியல. அப்புறம்தான் நாங்க வீட்டுக்குப் போய் வண்டிய இழுத்து வந்து, அவங்கள தூக்கி உக்கார வச்சு, இழுத்து போய் அவங்க வீட்ல விட்டோம்” என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT