ADVERTISEMENT

போனஸ்; தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

04:48 PM Nov 11, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவையைச் சேர்ந்த நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் சார்பில், அதன் பொதுச் செயலாளர் அன்புராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில், ஊழியர்களுக்கான போனஸில் சந்தா பிடித்தம் செய்யப்படுவதாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘போக்குவரத்து கழகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒப்புதலுடன், மாதாந்திர ஊதியத்திலிருந்து சங்கத்தின் சந்தா தொகையை பிடித்தம் செய்யப்பட்டு, தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்படும் நடைமுறை அமலில் உள்ளது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி ஊழியர்களின் வருடாந்திர போனஸ் தொகையிலும் தொழிற்சங்கங்களுக்கான சந்தா பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்களின் ஒப்புதல் இன்றி போனஸில் சந்தா பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புராஜ் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஒய். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். அவர், “வருடாந்திர போனஸ் தொகையில் இருந்து தொழிற்சங்கங்களுக்கு சந்தா பிடித்தம் செய்யப்படுவதால், பண்டிகைக் காலத்தில் ஊழியர்கள் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு மீண்டும் தள்ளப்படுகிறார்கள்” என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி ஆர்.ஹேமலதா, “தமிழ்நாடு அரசும், போக்குவரத்து கழகங்களும் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைப்பதாகவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT