ADVERTISEMENT

காலிஃப்ளவர் பக்கோடாவில் 'ரத்த பேண்டேஜ்' - பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு?

11:38 AM Oct 15, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் உணவு சீர்கேடு தொடர்பாக இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒன்று, சென்னை திருநின்றவூரில் காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றொன்று கொரட்டூரில் இரவுக்கடையில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை திருநின்றவூரில் சிடிஎச் சாலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் ஷைலாபானு என்பவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கியுள்ளார். அதனை தனது மகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மகளின் வாயில் ஏதோ ஒன்று சிக்க, எடுத்துப்பார்க்கையில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த புகாரையடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆய்வாளர் வேலவன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை கொரட்டூரில் இரவுக்கடை ஒன்றில் பரோட்டா சாப்பிட்டுவந்து உறங்கிய கல்லூரி மாணவர் சிபி, மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவர் சிபியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே இந்த உயிரிழப்புக்குப் பரோட்டா காரணமா என்பது தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த தாரணி என்ற சிறுமி, வீட்டின் அருகிலுள்ள மளிகைக் கடையில் குளிர்பானம் மற்றும் ரஸ்னா வாங்கி குடித்த நிலையில், குடித்த சிறிது நேரத்தில் வாந்தி ஏற்பட்டு உடல் நீல நிறத்தில் மாறி சிறுமி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT