ADVERTISEMENT

ஆளுநர் வருகைக்கு எதிராக கறுப்புக்கொடி - வாக்குவாதம் முற்றி வார்த்தையை விட்ட போலீசார் 

10:08 PM Jan 29, 2024 | kalaimohan

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆளுநர் தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருச்சி செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் குடைவரை ஓவியங்களைக் காண உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை அடுத்து சிபிஎம், காங்கிரஸ், வி.சி.க உட்பட ஏராளமான கட்சியினர் ஆளுநர் ரவி சித்தன்னவாசல் வந்தால் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ADVERTISEMENT

திட்டமிட்டபடியே கட்டியாவயல் பகுதியில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னத்துரை தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான எதிர்ப்புக் குழுவினர் கறுப்புக் கொடி, கறுப்பு பலூன்களுடன் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அங்கு வந்த போலீசார் ஆளுநர் வருகைக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்றனர்.

ADVERTISEMENT

அப்போது சிலர் போலீஸ் வேன்களில் இருந்து இறங்கி கார்களில் வருவதாக கூறியபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏடிஎஸ்பி தீந்தமிழ்வளவன், வாக்குவாதம் முற்றி 'போராடத் தெரியுது கைது செஞ்சா வரத் தெரியாதா' என கூடுதலான வார்த்தைகளை விட போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. அதை வீடியோ பதிவு செய்த செய்தியாளர்களையும் ஏடிஎஸ்பி பேசியதால் பத்திரிகையாளர்களும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். சில போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர்.

இந்நிலையில் நேரமின்மை காரணமாக ஆளுநர் சித்தன்னவாசல் வரவில்லை என்று கூறப்பட்டது. தொடர்ந்து ஆளுநரின் கார் திருச்சி நோக்கி சென்றது. மாலையில் ஆளுநருக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்த சின்னத்துரை உள்பட 78 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் போராட்டக்காரர்களையும் பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாகப் பேசிய போலீசாரை கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT