ADVERTISEMENT

"இதனை நான் சும்மா விட போவதில்லை"- ஹெச்.ராஜா ஆவேச பேட்டி!!

08:41 PM May 18, 2022 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தனர்.

இந்த நிலையில், காவல்துறை மதியம் 03.00 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறவில்லை. நிகழ்ச்சி இரவு நேரம் நடைபெறுவதால் மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை, நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட 300- க்கும் மேற்பட்டவர்கள் வர இருப்பதால் போதிய இடவசதி இல்லை, பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விபரம் அளிக்கவில்லை எனக் காரணம் கூறி அனுமதி மறுத்தது.

மேலும் பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு(30) 2 அமலில் இருப்பதாகக் கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாகக் கூறிய காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்த வந்துக் கொண்டிருந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜாவை, பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான 100- க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்தனர்.

அதனால் போலீசாருடன் ஹெச்.ராஜா வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனை மரியாதைக் குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிடம் தொலைபேசி வாயிலாக கேட்கப்பட்டது, "இந்து மதத்தில் தான் பிறந்தது தவறா? இந்து மதத்தில் மலைகளையும், ஆறுகளையும், குளங்களையும் வழிபட சொல்லி கூறப்பட்டு இருக்கிறது. அதற்காக பழனி வந்த தன்னை திண்டுக்கல் மாவட்ட போலீசார் எவ்வித காரணமும் சொல்லாமல் கைது செய்திருக்கின்றனர்.

பழனிக்கு நெய்க்காரப்பட்டியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு போலீசார் என்னை கைது செய்துள்ளனர். ஆனால் இதனை நான் சும்மா விட போவதில்லை. இந்துக்களுக்கான நீதியைக் கண்டிப்பாக நான் பெற்றுத் தருவேன். மேலும் எவ்வித காரணமும் கூறாமல், என்னை கைது செய்த திண்டுக்கல் போலீசாருக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன்" எனக் கூறினார். இதனால் பழனி பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவும் சூழலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT