ADVERTISEMENT

“100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் பாஜக அரசு... ” - துரை வைகோ

09:59 PM Nov 05, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு தன் முயற்சியை கைவிட வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் விளங்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரித்தது. கிராமப்புற பொருளாதாரமும் உயர்ந்தது. இந்த திட்டத்தின் மூலம், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற பெண்களே அதிக அளவில் பயனடைந்து வருகின்றார்கள் கொரோனா காலத்தில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் தலைகீழாக மாறியது. மூன்று வேளை உணவு என்பதே கேள்விக்குறி ஆனது. அந்த நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவையை இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் கிடைத்த வருவாய் தான் பூர்த்தி செய்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், இந்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை இந்தியாவின் முற்போக்கான திட்டம் என்று பாராட்டியதோடு, உலகம் முழுமைக்கும் இத்திட்டம் ஒரு சிறந்த பாடம் என நெகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தார். மேலும், இந்தியாவின் சமத்துவமின்மையை குறைக்க இத்திட்டம் மிகவும் பயன்படும் என அவர் தெரிவித்து இருந்தார். அப்படிப்பட்ட தலைசிறந்த இந்த திட்டத்தை முடக்கும் நோக்கத்தில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகின்றது. 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் பதினைந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் முடக்கப்பட்டு உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளார்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என்றால் 2.7 இலட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், மத்திய பாஜக அரசு தற்போது வெறும் 60,000 கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது கடந்த ஆண்டு நிதியை விட 21 விழுக்காடு குறைவு. இத்திட்டத்தில் பெரும்பாலும் கிராமப்புற, பட்டியலின, பழங்குடியின பெண்கள் தான் அதிக அளவில் பதிவு செய்து உள்ளனர். மத்திய பாஜக அரசின் நிதி குறைப்பால் அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கேள்விக்குறியாகி உள்ளது. நாட்டின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வந்த நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்தும் விதமாக செயல்படும் மத்திய பாஜக அரசு, நேரடியாக பலகோடி பட்டியலின மக்களின் வாழ்வை இதன்மூலம் சிதைக்கிறது. அழிக்கிறது.

மத்திய பாஜக அரசின் பல தவறான கொள்கைகளால் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி குறைப்பை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். இல்லாவிடில், ஏழை எளிய மக்களின் கோபத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன். நிதி குறைப்பு ஒருபக்கம் இருக்க, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என சமீபத்தில் பேசியிருக்கிறார். மத்திய பாஜக அரசு அவர்களின் கைப்பாவையாக உள்ள ஆளுநர்களின் மூலம் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்த நினைப்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என பேசியிருப்பதை மதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு தன் முயற்சியை கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT