ADVERTISEMENT

பிரதமர் மோடி படம் எங்கே..? அரசு அலுவலகத்தில் பாஜக நிர்வாகி செய்த சலசலப்பு!

11:50 AM Dec 08, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 2.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நேற்று (07.12.2021) காணொளி மூலம் திறந்துவைத்தார். அதையொட்டி பதிவுத்துறை அலுவலர்கள், விருத்தாசலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விருத்தாசலத்தில் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி பதிவுத்துறை அலுவலகத்தில் தேசத்தலைவர்கள் மகாத்மா காந்தி, அம்பேத்கர் படங்களுடன் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி படங்களுடன் ராகுல் காந்தியின் படமும் மாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாவட்டத் துணைத் தலைவரும், விருத்தாசலம் ஒன்றிய கவுன்சிலருமான செந்தில்குமார் என்பவர் அரசு அதிகாரிகளிடம், “தேசத் தலைவர்களின் படங்களுடன் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி படத்தை எப்படி வைத்தீர்கள்? காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியின் படத்தை எதற்காக வைத்தீர்கள்? தற்போதைய இந்திய பிரதமராக உள்ள நரேந்திர மோடியின் புகைப்படத்தை ஏன் வைக்கவில்லை?” என்று அதிகாரிகளிடம் கேட்டபோது காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி படங்கள் அவசரமாக அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டதோடு, பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டது. இதனிடையே துணை காவல் கண்காணிப்பாளர் அங்கித்ஜெயின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின்னர் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலமைச்சர் காணொளி மூலமாக திறந்துவைத்த அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் படம் வைக்கப்பட்டு, பின்னர் அகற்றப்பட்டதும், பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டதும், இதனால் ஏற்பட்ட சலசலப்புகளாலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT