ADVERTISEMENT

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

05:33 PM Apr 11, 2024 | kalaimohan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT