ADVERTISEMENT

மாணவன் கொடுத்த பிறந்தநாள் சாக்லேட்; 24 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

05:28 PM Nov 17, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சாக்லேட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 24 குழந்தைகள் மயக்கம், வாந்தி, தலைவலி ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் சயனபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. மொத்தம் 163 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ஒருவருக்கு இன்று பிறந்தநாள். அதன் காரணமாக அம்மாணவன் சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கும் நோக்கத்துடன் கடையில் சாக்லேட் பாக்கெட் ஒன்றை வாங்கி வந்துள்ளார். சக மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த சாக்லேட்டை சாப்பிட்ட 24 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டது.

இதனால் பதற்றமடைந்த ஆசிரியர்கள் புன்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக மருத்துவ குழுவினர் பள்ளிக்கே நேரில் சென்று மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகளும் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதன் பிறகு மாணவன் கொடுத்த சாக்லேட் பாக்கெட்டை ஆய்வு செய்ததில் அந்த சாக்லேட் காலாவதியானது என்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலாவதியான சாக்லேட்டை விற்ற கடை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளி வளாகத்திற்குள் திரண்டதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT