ADVERTISEMENT

பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதலில் அதிகாரிகளுக்கு ஆதாயம்? - புலம்பும் விருதுநகர் மாவட்டம்!

01:14 PM Apr 21, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆசிரியர்கள் பணி நிரவலில் விருதுநகர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி நேர்மையாகச் செயல்படவில்லை என ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த குமரேசன் நமக்கு அனுப்பிய கடிதத்தில், ‘கடந்த பிப்ரவரி 4-வது வாரத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடந்தது. தமிழகம் முழுவதும் உபரி ஆசிரியர்கள் ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு பணி நிரவல் என்ற பெயரில் மாற்றப்பட்டனர். 1-8-2021-ல் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, சிவகாசி ஒன்றியத்தில் பணியாற்றிய 24 இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவல் என்ற பெயரில், சிலரை சிவகாசி ஒன்றியத்திலுள்ள வேறு பள்ளிகளுக்கும், பலரை ஸ்ரீவில்லிப்புத்தூர், காரியாபட்டி, நரிக்குடி ஒன்றியங்களுக்கும் இடமாற்றம் செய்தனர். ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா விடுமுறை என்பதால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

கலந்தாய்வு நடைபெறும்போது மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தும், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி அதனைக் கருத்தில் கொள்ளாமல், அரசுக்குத் தெரிவித்து சில ஆசிரியர்களை அப்பள்ளிகளிலேயே தக்கவைக்காமல், வேண்டுமென்றே வேறு பள்ளிகளுக்கு மாற்றினார். தற்போது மாற்றுப்பணி என்ற பெயரில் ‘ஆதாயம்’ பெற்று, வேறு ஒன்றியத்துக்குச் சென்றவர்களை, குறுக்கு வழியில் சிவகாசி ஒன்றியத்துக்குள் இடமாற்றம் செய்துள்ளார்..’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இடைநிலை ஆசிரியர்கள் தரப்பிலிருந்து “சிவகாசி தாலுகா – விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியை பிரசன்னகுமாரி சாஸ்தா காரியாபட்டி தாலுகா, முஸ்டக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்தார். தற்போது அவரை, மீண்டும் அதே விஸ்வநத்தம் ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றுப்பணி என்ற பெயரில் நியமனம் செய்துள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டுதானே, பிரசன்னகுமாரி சாஸ்தாவை தேவைக்கேற்ப முஸ்டக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்தனர்? இந்த மாற்றுப்பணி நியமனத்தால் முஸ்டக்குறிச்சி பள்ளி மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்தானே? பிரசன்னகுமாரி சாஸ்தாவின் கணவர் மணிகண்டன் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். துறை சார்ந்த இடமாற்ற நடவடிக்கைகளை அறிந்தவர் என்பதால், பள்ளிக்கல்வித்துறை அதிகாரியை எப்படி சமாளிப்பது என்ற சூட்சுமம் அவருக்குத் தெரிந்துள்ளது. ரூ.1 லட்சம் வரை தந்து, மாற்றுப்பணிக்கான உத்தரவைப் பெற்றுள்ளார். பணி நிரவல் கலந்தாய்வு என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பாகவும், ஆதாயம் பெறுவதற்கான குறுக்கு வழியாகவும் இருக்கிறது.” எனக் குமுறல் வெளிப்பட்டது. நாம் பிரசன்னகுமாரி சாஸ்தாவிடமும், அவருடைய கணவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் எஸ்.எஸ்.ஐ. மணிகண்டனிடமும் பேசினோம். “குடும்பச் சூழ்நிலையை எடுத்துச்சொல்லியே மாற்றுப்பணிக்கான உத்தரவைப் பெற்றோம். மற்றபடி, பணம் எதுவும் கொடுக்கவில்லை.” என்று மறுத்தனர்.

ஞானகவுரி

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியைத் தொடர்புகொண்டோம். “பொதுவா, டிரான்ஸ்பர் விஷயத்துல தனிநபர் கோரிக்கை வரத்தான் செய்யும். நியாயமான மூன்று கோரிக்கைகளுக்கு செய்து கொடுத்திருக்கேன். பிரசன்னகுமாரி சாஸ்தாகிட்ட இருந்து நீண்ட நாள் கோரிக்கையா இது இருந்துச்சு. அவருக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. காவல்துறையில் அவருடைய கணவர் நேரம், காலம் பார்க்காம வேலை பார்க்கிறாரு. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லைன்னு என்கிட்ட உதவி கேட்டார். விஸ்வநத்தம் பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை அதிகரிச்சிருச்சு. இது தற்காலிக உத்தரவுதான். முஸ்டக்குறிச்சி பள்ளியில், இருக்கிற ஆசிரியர்களை வைத்து சமாளிச்சிக்கிறோம்னு சொன்னாங்க. லஞ்சம் வாங்கினதா கமென்ட் அடிக்கிறதுக்கு நம்மாளுங்களுக்கு சொல்லிக்கொடுக்கணுமா என்ன?” என்று சிரித்தார்.

ஆசிரியர் பொது மாறுதலோ, பதவி உயர்வோ, பணி நிரவலோ, வெளிப்படைத் தன்மையுடன் நேர்மையாகக் கலந்தாய்வு நடக்கவேண்டும் எனக் கோரிக்கை வலுத்துவரும் நிலையில், குறிப்பிட்ட இடத்திற்கோ, பணியிடத்திற்கோ இடமாறுதல் பெற ரூ.10 லட்சம் வரை லஞ்சம் கொடுக்கவேண்டிய நிலையிருக்கிறது எனத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம் மதுரை உயர் நீதிமன்றக்கிளை “பல வழக்குகளிலும் ஆசிரியர் பணியிட மாற்றம் நேர்மையான முறையில் நடைபெறவில்லை எனத் தொடர்ந்து குற்றம்சாட்டு எழுகிறது. IPL கிரிக்கெட் வீரர்களைப் போல, ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு லட்சக்கணக்கில் ஏலம் விடப்படுகிறதா? லட்சங்களில் லஞ்சம் கொடுத்து பணியிட மாறுதல்பெறும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எந்த நிலையில் கல்வி கற்பிப்பார்கள்? பள்ளி மாணவர்களுக்கு எவ்வகையான ஒழுக்கத்தைப் போதிப்பார்கள்?” எனக் கேள்வி எழுப்பியிருந்ததை, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT