ADVERTISEMENT

'படுக்கை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்'-தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

07:18 PM Dec 26, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் ‘பி.எஃப்.7’ எனும் அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 'கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்; ஆறு மாதங்களுக்கு தேவையான கரோனா பரிசோதனை கருவிகளை வாங்க வேண்டும்; ஆக்சிஜன் சிலிண்டர்களை அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்க வேண்டும்; கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான என்95 முகக்கவசம் மற்றும் முழு உடல் கவசம் ஆகியவற்றை மருத்துவமனைகள் தயாராக வைத்திருக்க வேண்டும்; மருத்துவ மாணவர்கள், பாராமெடிக்கல் மற்றும் நர்சிங் படிக்கக்கூடிய மாணவர்கள் தங்கும் விடுதிகளிலும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்; மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதோடு, தடுப்பூசி மையம் முழு வீச்சில் செயல்பட வேண்டும்; கரோனா வார்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கைகளின் இருப்பு சரி பார்க்கப்பட வேண்டும்; நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகளை விரிவு படுத்த வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT