ADVERTISEMENT

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

07:56 AM Mar 29, 2024 | kalaimohan

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT