ADVERTISEMENT

அய்யனார் அப்படித்தான்! -வில்லங்க அரசியலும் பாலியல் புகாரும்..!

08:52 PM May 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கவிதா என்பவர் மீது பொய் புகார் பெற்று பொய் வழக்கு போட்டதாக மம்சாபுரம் காவல்துறையைக் கண்டித்தும், அதிமுகவில் இருந்தபோது கொள்ளையடித்து, தற்போது திமுகவில் சேர்ந்து, கவிதா போன்ற பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் முன்னாள் வைஸ்-சேர்மன் அய்யனார் மற்றும் அவருடைய மனைவி ஜோதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மம்சாபுரம் பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

என்ன விவகாரம் இது?

கவிதாவின் அம்மா நீலாவதி தனது புகாரில் ‘முன்னாள் துணை சேர்மன் அய்யனார், என் மகள் கவிதாவை நேரடியாகவும், அவருடைய மனைவி ஜோதி மூலமாகவும் தவறாக அழைத்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் என் மகள் கவிதாவை ஜோதி அடித்துவிட்டார். அதனால், அய்யனாரும் படிக்காசு என்பவரும் என் வீட்டுக்கு வந்து சண்டை போட்டனர். அப்போது, அய்யனார் என்னை அடித்து ரத்தக்காயம் ஏற்படுத்தினார். என் சேலையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தினார். கொலைமிரட்டலும் விடுத்தார். நான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத மம்சாபுரம் காவல்நிலையம், மணல் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அய்யனாருக்கு சாதகமாக நடந்துகொள்கிறது. ஜோதியிடமிருந்து என் மகள் கவிதா மீது ஒரு புகாரை வாங்கி வைத்துக்கொண்டு, சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நினைக்கிறது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அய்யனாரின் மனைவி ஜோதி தனது புகாரில் ‘கப்பல் வீட்டுக்காரர் சரவணன் எனக்கு புருஷன். நான் எப்படி நடந்தால் உனக்கென்ன? என்று என் வீட்டுக்கே வந்து சண்டை போட்டு என் கன்னத்தில் அடித்துவிட்டார். என்னை விட்டுவிடு என்று நான் கத்தினேன். ஆனாலும், கவிதா செருப்பைக் கழற்றி மூன்று முறை அடித்துவிட்டாள். அப்போது, வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த சரவணன், கவிதா என்னை அடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார். சரவணனும் எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கவிதாவுக்கும் ஜோதிக்கும் உள்ள முன்பகை குறித்து விசாரித்தோம். கணவரை விட்டுப் பிரிந்து வாழும் கவிதா, ஒருவகையில் ஜோதியின் உறவினரான, ஏற்கனவே திருமணமான சரவணனுடன் பழகிவந்துள்ளார். ஜோதியும்கூட, அய்யனாருக்கு இரண்டாவது மனைவிதான். ஆனாலும், இது தகாத உறவென சரவணன் – கவிதா குறித்துப் பேசியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து, ஜோதியை கவிதா காலணியால் அடித்துள்ளார். இதையறிந்து ஆவேசமான அய்யனார், கவிதாவின் வீட்டுக்குச் சென்று அவருடைய அம்மா நீலாவதியைத் தாக்கியிருக்கிறார்.

இந்த விவகாரம் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் கவனத்திற்குச் செல்ல, இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது, மம்சாபுரம் காவல்நிலையம். சார்பு ஆய்வாளர் முத்துராஜிடம் பேசினோம். “நீலாவதி அளித்த புகார் மீதும், ஜோதி அளித்த புகார் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். கவிதா புகார் எதுவும் தரவில்லை. அய்யனாருக்கு எதிரானவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். காவல்துறை விசாரித்தவரையில், பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளுக்கும் அய்யனாருக்கும் சம்பந்தம் இல்லை.” என்றார்.

‘அய்யனார் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டா?’ என விசாரித்தபோது, மம்சாபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் செல்லத்துரை நம்மிடம் பேசினார்.“சர்வாதிகாரியாக ஊருக்குள் வலம்வரும் அய்யனார், ஒரு மணல் மாஃபியா. அவர், எனக்கு உறவினரும்கூட. அவர் மீது வழக்குகள் உள்ளன. இந்த ஒரு பெண் விஷயத்தில் மட்டுமல்ல, பல பெண்களின் வாழ்க்கையில் அய்யனார் விளையாடியிருக்கிறார்.

தன்னுடைய அந்தரங்கத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சொகுசு பங்களா வைத்திருக்கிறார். அவர் தலைவராக இருந்த கூட்டுறவு சங்கத்தில்தான் நான் துணைத்தலைவராக இருந்தேன். அதனால், அய்யனார் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நல்லாவே தெரியும். நானறிய, ஊட்டச்சத்து வேலை வாங்கித் தந்த ஒரு பெண்ணை அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணினார். பெண்களிடம் நெருங்குவதற்கு அரசியல் அவருக்குப் பயன்படுகிறது. மானத்துக்குப் பயந்து பெண்கள் யாரும் புகார் தருவதில்லை. ஊருக்கே அய்யனாரின் லீலைகள் தெரியும். பாவம், போலீசுக்குத் தெரியாமல் போய்விட்டது.” எனப் புன்முறுவலித்தார்.

இந்நாள் திமுக பிரமுகரான அய்யனாரைத் தொடர்புகொண்டோம். “பிரச்சனை ஆனபோது, நான் அணிந்திருந்த மோதிரம் பட்டு நீலாவதியின் முகத்தில் ரத்தம் வந்தது. எந்த மனைவியாவது, தன் கணவனிடம் இன்னொரு பெண்ணைப் பழகச் சொல்வாரா? என் மீதான பாலியல் குற்றச்சாட்டு என்பது முழுக்க முழுக்கப் பொய்யானது. முன்பு நான் ‘அப்படி-இப்படி’ விளையாட்டாக இருந்தது உண்மைதான். இப்போது அப்படி கிடையாது. போஸ்டர் ஒட்டியதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது.” என்றார்.

சிலர், அரசியலையும் பாலியலையும் பிரிக்கமுடியாத ஒன்றாக ஆக்கிவருவது கொடுமையானது!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT