ADVERTISEMENT

மினிடெம்போவில் மாப்பிள்ளை பார்க்கச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கொடூரம்!

03:55 PM Jul 13, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது அடுக்கம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் முத்து. இவர் கட்டுமான தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மினி டெம்போவை சொந்தமாக வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் பெண்ணுக்கு முகையூர் கிராமத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அந்த மாப்பிள்ளை வீட்டாரைச் சந்தித்து திருமணம் குறித்து பேசுவதற்காகவும் மாப்பிள்ளையை நேரில் பார்த்து முடிவு செய்வதற்காகத் தனது மினி டெம்போவில் உறவினர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

ADVERTISEMENT

அப்படிச் செல்லும்போது திருவண்ணாமலை விழுப்புரம் நெடுஞ்சாலையில் இவரது வாகனம் சென்று
கொண்டிருந்த போது திடீரென பாம்பு ஒன்று குறுக்கே வேகமாகச் சென்றுள்ளது. அந்த பாம்பை பார்த்த ஓட்டுனர் முத்து, பயத்தில் திடீரென தனது வாகனத்தை நிறுத்துவதற்காக பிரேக் போட்டுள்ளார். இதனால் வாகனம் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாப்பிள்ளை பார்க்கச் சென்ற பலருக்கும் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். உடனடியாக இந்த விபத்து குறித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சென்றபோது மினிடெம்போ விபத்துக்குள்ளாகி ஒரே ஊரைச் சேர்ந்த 20க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரக்கு ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மினி டெம்போ, மினி லாரி, பெரிய லாரிகள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் டிராக்டர், டிப்பர் போன்றவற்றில் பொதுமக்கள் பயணம் செய்யக் கூடாது என்ற விதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படி மீறி பயணம் செய்து அதில் பயணம் செய்பவர்கள் விபத்தில் சிக்கி அதில் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு கிடைக்காது. ஆனால் இதையெல்லாம் மறந்து தங்கள் பயணத்திற்கு ஏற்றவாறு சுபகாரியங்களுக்கு மினி டெம்போக்களில் மக்கள் சிலர் பயணம் செய்கிறார்கள். அதிலும் பொதுவாக கிராமப்புறங்களில் அதிக அளவு மக்கள் இப்படிப்பட்ட சரக்கு வாகனங்களில் ஏறிச் செல்வது அன்றாடம் நடைபெற்று வருகிறது. அதில் செல்பவர்கள் இது போன்ற விபத்துக்களில் சிக்கி பாதிக்கப்படும்போது அவர்களுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்காது. எனவே பொதுமக்கள் இது போன்று ஆபத்து மிக்க மினி டெம்போ மற்றும் சரக்கு வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது அதிகாரிகளின் வலியுறுத்தலாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT