ADVERTISEMENT

சென்னையில் இருந்து பேருந்தில் செல்லும் தென்மாவட்டப் பயணிகளின் கவனத்திற்கு!

07:57 AM Jan 29, 2024 | prabukumar@nak…

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) நாளை (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் போது விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்படும். அதே சமயம் மீண்டும் தென்மாவட்டங்களுக்கு கிளம்பும் அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவும், பூவிருந்தவல்லி வழியாக வேலூர், திருப்பத்தூர், ஓசூர் வரை செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT