ADVERTISEMENT

சென்னையில் ரயிலை கவிழ்க்க முயற்சி? குற்றவாளியை கைது செய்த காவல்துறை

06:50 PM Jun 09, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஏழாம் தேதி அதிகாலை திருநின்றவூர் டாடா ஸ்டீல் கம்பெனியிலிருந்து சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டு திருநின்றவூருக்கும் நெமிலிச்சேரிக்கும் இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் சுமார் 3 அடி நீளமும் 20 கிலோ எடையுள்ள தென்னை மரத் துண்டு ஒன்று கிடந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எஞ்சின் ஓட்டுநர் (Loco pilot) மதியழகன் மற்றும் உதவி ஓட்டுநர் பிரசாந்த் ஆகியோர் இன்ஜினை நிறுத்தி தண்டவாளத்தில் இருந்த தென்னை மரத் துண்டை அப்புறப்படுத்தினர். இதன் பின் இன்ஜினை மீண்டும் இயக்கி அங்கிருந்து சென்றுள்ளனர். தொடர்ந்து ஆவடி ரயில் நிலையம் வந்து அங்கிருந்த ரயில்வே அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக ரயில்வே அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல்துறை கூடுதல் இயக்குநர் சந்தீப் மிட்டல் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இன்று மாலை 4 மணியளவில் திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த பாபு என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர் குடிபோதையில் தண்டவாளத்தின் மீது தென்னை மரத் துண்டை வைத்தது தான் தான் என ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT