ADVERTISEMENT

'உழவர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள் ; இதற்கு தீர்வு வேண்டும்'-பாமக அன்புமணி வலியுறுத்தல்

05:54 PM Feb 05, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

'தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மோசடியைக் கண்டித்து உழவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இரு மாதங்களைக் கடந்து போராட்டம் நீடிக்கும் நிலையில், இந்த சிக்கலைத் தீர்க்க தமிழக அரசின் சார்பில் இதுவரை பயனளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது' பாமக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்அறிக்கையில், 'ஆரூரான் சர்க்கரை ஆலை, வங்கிகளுக்கு ரூ.150 கோடி கடன், உழவர்களுக்கு ரூ.125 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியிருந்த நிலையில் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் திவாலாகி விட்டதாக அறிவித்தது. திவால் அறிவிப்பு வெளியான பிறகு தான் அந்த ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் கடலூர் மாவட்டத்தில் ரூ.90 கோடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.360 கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. ஒருபுறம் வங்கிகள் உழவர்களிடமிருந்து கடனை வசூலிப்பதற்கு தீவிரம் காட்டும் நிலையில், ஆலை நிர்வாகத்தைக் கைப்பற்றிய மத்திய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயம், அதை கால்ஸ் டிஸ்ட்டில்லரீஸ் என்ற நிறுவனத்திற்கு சில மாதங்களுக்கு முன் விற்பனை செய்துவிட்டது.

புதிய ஆலை நிர்வாகம், உழவர்கள் பெயரில் வங்கியில் வாங்கப்பட்ட கடன் சுமையை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால், இப்போது அந்தக் கடனை உழவர்கள் தான் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. தாங்கள் மிகவும் தந்திரமாக ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட விவசாயிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தங்கள் பெயரில் வாங்கப்பட்ட கடனை திரு ஆரூரான் சர்க்கரை ஆலையின் புதிய நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஆலை நிர்வாகம் தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.125 கோடியை வட்டியுடன் வசூலித்துத் தர வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர். நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் இரு மாதங்களைக் கடந்தும் நீடிக்கிறது.

கடன் வாங்கி ஏமாற்றிய ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், உழவர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையையும் தராமல், உழவர்கள் பெயரில் வாங்கிய கடனையும் செலுத்தாமல் தப்பித்து விட்டது. ஆலையை வாங்கிய கால்ஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனமோ, முந்தைய நிர்வாகத்தின் எந்த சுமையையும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. ஆனால், எந்த குற்றமும் செய்யாத விவசாயிகள் தான், ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு தாங்கள் வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகையையும் பெற முடியாமல், தங்கள் பெயரில் வங்கிகளில் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கிய கடனையும் சுமந்து கொண்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியிலிருந்து காப்பாற்றும்படி உழவர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தீர்வு தான் கிடைக்கவில்லை.

விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியது அரசின் கடமை ஆகும். தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுகளை நடத்தியிருக்கிறது. ஆனால், மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பதால் சிக்கலுக்கான தீர்வு கைநழுவிக் கொண்டே செல்கிறது. தமிழக அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப் படாத பட்சத்தில், இந்த விவகாரம் இப்போதைக்கு தீர்க்கப்பட வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி.

ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மோசடியால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அனுபவித்து வரும் மன உளைச்சல்கள் சொல்லி மாளாது. இதே நிலை இப்படியே தொடருவதை அரசு அனுமதிக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்ட முத்தரப்புப் பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக தொழில்துறை செயலாளர் முன்னிலையில் இத்தகைய பேச்சுகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அது ஒன்று தான் இந்த சிக்கலுக்கு தீர்வை வழங்கும்.

எனவே, அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் பெயர்களில் ஆரூரான் சர்க்கரை ஆலையில் பழைய நிர்வாகம் வாங்கிய கடன்களை புதிய நிர்வாகமே ஏற்றுக் கொள்வதற்கும், உழவர்களுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் பெற்றுத் தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT