ADVERTISEMENT

தமிழகத்தில் போட்டியிட்ட தேர்தல்களில் தோற்றதேயில்லை என்ற பெருமை கலைஞருக்கு மட்டுமே உண்டு: அன்புமணி

07:31 PM Aug 07, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திமுக தலைவர் கலைஞர் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். கலைஞரின் மறைவை அடுத்து அன்புமணி ராமதாஸ் எம்.பி. இரங்கல் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

’’இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை ஐந்து முறை அலங்கரித்தவரும், திமுக தலைவருமான கலைஞர் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். இந்த சோகத்தை என்னால் தாங்க முடியவில்லை.

தமிழக அரசியல் வரலாற்றை எழுதினால் அதில் அதிக பக்கங்களை கலைஞருக்காகத் தான் ஒதுக்க வேண்டும். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அங்கம் அவர். அண்ணாவையும், காமராசரையும் போலவே அரசியலில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்து தமது திறமை, உழைப்பு, தொண்டர்களை கவர்ந்திழுக்கும் பேச்சு ஆகியவற்றால் மட்டுமே உச்சத்தை அடைந்தவர். மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மத்திய ஆட்சியாளர்களுக்கு பணிந்து தான் செல்ல வேண்டும் என்ற வழக்கத்தை உடைத்த கலைஞர், இந்திரா காந்தி, வி.பி.சிங். வாஜ்பாய் உள்ளிட்ட பிரதமர்களின் மரியாதையைப் பெற்றவர். மேலும், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால் போன்றோர் பிரதமர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். கடந்த 50 ஆண்டுகளில் பிரதமர்களாக இருந்த அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர் கலைஞர்.

மாநிலங்களுக்கு பல உரிமைகளை பெற்றுக் கொடுத்தவர், மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தவர் என கலைஞரின் அரசியல் சாகசங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். தமிழக மக்களின் நலன்களுக்காகவும், சமூக நீதியைக் காப்பதற்காகவும் மிகக்கடுமையாக உழைத்தவர். தமிழகத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் கட்டுமானங்கள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவர். அரசியலில் வெற்றி, தோல்விகளை சமமாகப் பார்த்தவர். தமிழக அரசியலில் எத்தனையோ புயல்கள் வீசிய போதிலும், அவற்றுக்கெல்லாம் அசையாமல் 50 ஆண்டுகள் தலைவராகவும், 80 ஆண்டுகள் திமுக மற்றும் திராவிடர் கழக நிர்வாகியாகவும் களப்பணி ஆற்றியவர். தமிழகத்தில் போட்டியிட்ட தேர்தல்களில் தோற்றதேயில்லை என்ற பெருமை திமுக தலைவர் கலைஞருக்கு மட்டுமே உண்டு.

தனிப்பட்ட முறையில் என் மீது அன்பும், அக்கறையும் காட்டியவர். அவர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தின் நலனுக்காக அவர் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய சுகாதார அமைச்சர் என்ற முறையில் நான் நிறைவேற்றினேன். தருமபுரி மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், அவற்றைத் தீர்த்து மருத்துவக் கல்லூரியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று அக்கல்லூரியை தமிழக அரசு திட்டமிட்டிருந்த காலத்திலேயே அக்கல்லூரியை திறக்க வகை செய்தேன். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அந்த அளவுக்கு அக்கறை கொண்டவர் கலைஞர்.

திமுக தலைவர் கலைஞரின் மறைவு திமுகவுக்கும், திமுக தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT