ADVERTISEMENT

தனியார் பேருந்துக்கு ஆரத்தி எடுத்து கிராம மக்கள் கொடுத்த வரவேற்பு!

10:57 AM Jun 11, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT


அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி பரதூர் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு, தனியார் பேருந்துகளை இயங்க அனுமதி அளித்தது. அதனையடுத்து நேற்று முதல் பேருந்துகள் இயங்கலாம் என அறிவிப்பு வெளியான நிலையில், கரைவெட்டி பரதூர் கிராமத்திற்குப் பேருந்து இரவு முதல் இயங்கியது.

ADVERTISEMENT


மூன்று மாதமாக அவதியுற்று வந்த கிராம மக்களுக்குப் பேருந்து வந்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இன்று காலை தங்களது ஊருக்கு வந்த பேருந்துக்கு கரைவெட்டி பரதூர் கிராம மக்கள் சார்பாக மலர் தூவி ஆரத்தி எடுத்து, ஓட்டுநர் நடத்துனருக்கு பூங்கொத்துக் கொடுத்து கற்பூர தீபம் ஏற்றி, நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெருக்க உதவும் எலுமிச்சை, இஞ்சி கலந்த சாறு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

தங்களது உயிரைப் பணயம் வைத்துப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் எங்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை உயிருள்ள உயிரினம் போன்றே கருதி மலர் தூவி, கற்பூரத்தைக் காண்பித்து, ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தியதாக கரைவெட்டி பரதூர் கிராம மக்கள் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.


இது குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கூறுகையில், "பேருந்து பஞ்சர் ஆகிவிட்டால் கிராம மக்கள் வெள்ளந்தியாக எங்களுக்கு உதவி செய்வர். ஏதாவது பேருந்துக்கு இடையூறு செய்ய யாராவது வந்தாலும் கிராம மக்கள் சமரசம் செய்து வைத்துப் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்வர். வாகனப் பழுது ஏற்பட்டால் கிராம மக்கள் தங்களது டிராக்டரை கொடுத்து தங்களது சொந்த செலவில் உதவி செய்வர். கிராம மக்களின் வெள்ளந்தி மனசால தான் இன்னும் இந்த உலகம் நல்லபடியாக இயங்குது. இந்தக் கிராம மக்கள் எங்களுக்கு அளித்த மரியாதை, ஆயிரம் விருதுகள் கொடுத்ததற்குச் சமம்" என நெகிழ்ச்சியாக தெரிவித்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT