ADVERTISEMENT

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு... மகிழ்ச்சியில் டெல்டா!!

07:33 PM Feb 09, 2020 | kalaimohan

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 2017 பிப்ரவரி 15 ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு நெடுவாசலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொந்தளிப்பு போராட்டமாக உருவெடுத்து 196 நாட்கள் நடந்தது. போராட்டங்களில் எதிர்கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். விவசாயிகள் விவசாய கருவிகளுடன் வந்து போராட்டக்களத்தில் நின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி திட்டம் வராது என்று சொல்வதும் அடுத்த சில நாட்களில் மற்றொரு அறிவிப்பை வெளியிடுவதுமாக இருந்தனர். கடந்த மாதம் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை, பொதுமக்கள் கருத்தும் தேவையில்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவித்தது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் மீண்டும் போராட்டத்தை தூண்டிவிட்டது.

அதனால் டெல்டா மாவட்டங்களில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தான் இன்று முதலமைச்சர் ஒரு விழாவில் பேசும் போது.. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை பார்த்த நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடந்த நாடியம்மன் கோயில் திடலில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். மேலும் கைஃபா அமைப்பினரும் கடைவீதியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார்கள்.


இதுகுறித்து போராட்டக்குழுவினர் மற்றும் கைஃபா அமைப்பினர் கூறும் போது, முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கோரிக்கையை தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதே கோரிக்கைகளை தான் கிராம சபையிலும் தீர்மானமாக நிறைவேற்றினோம். கிராம சபை தீர்மானத்திற்கு மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறோம். அறிவிப்போடு நின்றுவிடாமல் எதிர் வரும் சட்டமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும் என்றதை கோரிக்கையாக முன்வைக்கிறோம் என்றனர்.

மேலும் நெடுவாசலில் முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்ட நிலையில் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிக்க அவர்களை அழைத்துச் செல்லும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. அதாவது நாளை அமைச்சர் விஜயபாஸ்கருடன் முதலமைச்சரை நெடுவாசல் போராட்டக்குழுவினர் சந்திக்க உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT