ADVERTISEMENT

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் கல்வி உதவிதொகைக் கேட்டுப் போராட்டம்! 

04:17 PM Apr 11, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் பொறியியல் மாணவர்கள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பட்டதாரிக்கான கல்வி உதவிதொகை கடந்த மூன்று ஆண்டுககளாக வழங்காததைக் கண்டித்தும் மற்ற அரசு பொறியியல் கல்லூரியில் வசூலிக்கும் கட்டணத்தை இந்தக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி வகுப்பைப் புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமரவேல் கலந்துகொண்டு மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் மத்தியில் பேசினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் 30-தேதிக்குள் கல்வி உதவி தொகை வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் கலைந்துசென்றனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் செம்மலர், செயலாளர் குமாரவேல் கூறுகையில், ‘அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் புலத்தில் படிக்கின்ற மாணவர்களுக்கு மற்ற அரசுப் பல்கலைக்கழகம் போலவே கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். பல்கலை கழகம் அரசு பல்கலைகழகமாக ஆன பின்பும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இங்கு ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் 5,500 மற்றும் சிறப்புக் கட்டணம் 15,000 இதர கட்டணம் 10,000 அளவில் வசூலிக்கப்படுகிறது. சிறப்புக் கட்டணம் வசூலிப்பதற்கு பல்கலைக்கழகம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து உதவித்தொகை இயக்குனரிடம் கேட்டபோது உதவித்தொகையில் பாதி பணத்தை தருகிறோம் மீதிப் பணத்தில் பல்கலைக்கழகத்திற்கு பெயிண்ட் அடித்து விட்டோம் என அலட்சியமாகப் பதில் அளிதிருக்கிறார். மாணவர்களுடைய உதவித்தகையை உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடித்ததோடு மட்டுமல்லாமல் பணத்தை முழுமையாகக் கொடுக்கமாட்டோம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் கூறுவதையும், எந்த விதமான அனுமதியின்றி மாணவர்களின் பணத்தை செலவழித்த பல்கலைக்கழக நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உரிய கல்வி உதவித்தொகையை முழுமையாக ஆண்டுக்குத் தலா ரூ 20 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். மற்ற அரசு பல்கலைக் கழகங்களில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை இங்கும் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இந்திய மாணவர் சங்கம் கேட்டுக் கொள்கிறது’ என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT