ADVERTISEMENT

“நீதிமன்றத்தின் வாயிலாக ஊழலை வெளிப்படுத்தப் போகிறேன்” - அண்ணாமலை 

10:55 AM Jul 14, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுகவின் எம்.பிக்கள், அமைச்சர்கள், பிரமுகர்கள் என 12 பேரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியது. இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதால் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர்கள் கூறினர். ஆனால் வேண்டுமானால் வழக்கு தொடருங்கள் மன்னிப்பு கேட்க முடியாது என்று அண்ணாமலை கூற, டி.ஆர். பாலு, ஆர்.எஸ். பாரதி, கனிமொழி உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்கள் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர். பாலு எம்.பி தொடர்ந்த வழக்கு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அதற்காக அண்ணாமலை ஆஜராகவுள்ளார். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர். பாலு அவர்களின் சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை, தமிழக பாஜக சார்பாக திமுக ஃபைல்ஸில் வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் என் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று (14/07/2023) நேரில் ஆஜராக உள்ளேன். ஊழல் எனும் கரையான், இத்தனை ஆண்டு காலம் நமது நாட்டை எப்படி அரித்திருக்கிறது என்றும், அதனை அரசியலிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எத்தனை முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள்.

நமது மாண்புமிகு நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவினர் சொத்துக் குவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளும் மாண்புமிகு நீதிமன்றம் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT