ADVERTISEMENT

மாங்குரோவ் காடுகளை அழித்து கட்டுமானப்பணி! -ஆந்திர அரசின் திட்டத்துக்கு இடைக்காலத்தடை!

07:25 AM May 02, 2020 | rajavel

ADVERTISEMENT


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மாங்குரோவ் காடுகளை அழித்து 100 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஆந்திர அரசின் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சத்யநாராயண பாலிஷெட்டி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மாங்குரோவ் காடுகளை அழித்து வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரும் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தைச் செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் கே. ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணர் உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா அமர்வு கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாது. தீர்ப்பாயம் நியமித்த குழு அளித்த அறிக்கையின்படி, மாங்குரோவ் வனப்பகுதியில் வீடுகள் கட்ட முடிவெடுத்திருப்பது தெளிவாகிறது. ஆந்திர அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிராகச் சிலர் பட்டா கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். குறிப்பிட்ட கட்டுமானம் மேற்கொள்ளப்பட உள்ள பகுதி மாங்குரோவ் காடுகளுக்குள் வருகிறதா? அதற்குக் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி தேவையா? வனத்துறை அனுமதி தேவையா? கோரிங்கா வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதா? எனத் தீர்ப்பாயம் அறிய விரும்புகிறது.

அதனால், சென்னை மண்டலத்தில் செயல்படும் மத்திய சுகாதார மற்றும் வனத்துறை அதிகாரி, ஆந்திர கடலோர ஒழுங்குமுறை மண்டல மூத்த அதிகாரி, வனத்துறை தலைவரால் நியமிக்கப்படும் மூத்த வனத்துறை அதிகாரி, மேற்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், மேற்கு கோதாவரி வன அதிகாரி ஆகியோர் கொண்ட சிறப்புக் குழு நியமிக்கப்படுகிறது.

இந்தக் குழு, கடந்த 6 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட செயற்கைகோள் வரைபடம், தற்போதைய வரைபடம் ஆகியவற்றின் மூலம் குறிப்பிட்ட கட்டுமான பகுதி மாங்குரோவ் வனப்பகுதியில்தான் நடைபெறுகிறதா? என நேரில் ஆய்வு செய்ய வேண்டும். தீர்ப்பாயத்தால் நியமிக்கப்படும் சிறப்புக் குழுவானது 3 மாதங்களில் தனது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆய்வின் போது, வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை இடிக்கவோ, சேதப்படுத்தவோ துணை புரிந்திருந்தால், மாநில அரசு மற்றும் அதற்கு துணை போன அதிகாரிகள் கண்டிப்பாக விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்களுக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு மாறாக 100 ஏக்கர் பரப்பளவில் மாங்குரோவ் காடுகளை அழித்து வீடுகட்டித் தரும் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சிறப்புக்குழுவின் அறிக்கை வரும் வரை அப்பகுதியில் எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT