ADVERTISEMENT

போதையில் மக்களிடம் தகராறு செய்த அமெரிக்கர்; மூடி மறைக்கும் காவல்துறை 

05:04 PM Feb 23, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை நகரில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. அதேபோல் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. திருவண்ணாமலை நகரம், கிரிவலப் பாதையில் கஞ்சா போதை ஆசாமிகள் அதிகளவில் உள்ளார்கள். தங்கு தடையின்றி கஞ்சா விற்பனை நடக்கிறது. இதனால் எங்கள் பகுதி பெண்கள், குழந்தைகள் இரவில் நடந்து செல்ல முடியவில்லை என நகர்மன்ற கூட்டத்திலேயே சில கவுன்சிலர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் கிரிவலப் பாதையில் அரசு கலைக்கல்லூரி அருகில் திருவண்ணாமலை டூ பெங்களூரூ சாலையில் அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர், பிப்ரவரி 23 ஆம் தேதி காலை 8 மணியளவில் சாலையில் வாகனங்களை மடக்கி தள்ளாடியபடி பிரச்சனை செய்ய துவங்கினார். கல்லூரி மாணவர்கள் இருவர் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை மறித்து வண்டியிலிருந்த சாவியை எடுத்துக்கொண்டு, சாலையின் சென்டர் மீடியன் சுவரில் ஏறி அமர்ந்துகொண்டு தள்ளாடிக்கொண்டு இருந்தார். அந்த இளைஞர்கள் சாவி கேட்டும் தராமல் பிரச்சனை செய்ய இதனால் அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது.

சாவியை வாங்கச் சென்ற ஒரு இளைஞனின் செல்போனை பறித்து கீழே வீசி அதை காலால் தேய்த்து உடைத்துள்ளார். திருவண்ணாமலை நகர காவல்நிலையத்துக்கு தகவல் சொல்லப்பட்டதும் இரண்டு போலீசார் சம்பவயிடத்துக்கு வந்தனர். அவர்களையும் அந்த வெளிநாட்டுக்காரர் தாக்க முயற்சி செய்ய அந்த நபரை பிடித்து அவரின் கைகளைப் பின்னால் கட்டி கல்லூரி முன் உட்கார வைத்துவிட்டனர். தன்னை யாரும் வீடியோ எடுக்கக்கூடாது; மருத்துவமனைக்கு அனுப்பக்கூடாது என தகராறு செய்தார். சக வெளிநாட்டு பயணி ஒருவர் அவரின் அருகில் அமர்ந்து பேசியவர் குடிக்க தண்ணீர் தந்தபோது, அதில் “விஷம் கலந்து தர்ற” எனச் சொல்லியபடி அதனை வாங்கி குடிக்க மறுத்துவிட்டார். 108 ஆம்புலன்ஸ் வரவைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைக்க முயன்றனர். அவர் போகாமல் தகராறு செய்தார். பின்னர் அவரின் கால்களை கட்டி ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த நபர் திருவண்ணாமலையில் கடந்த 3 மாதமாக ரமணாஸ்ரமம் அருகே ஒருவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார் என்கிற தகவல் கிடைத்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே கிரிவலப் பாதையில் காஞ்சி சாலையில் கஞ்சா போதையில் அந்த வழியாகச் சென்ற பொதுமக்களிடம் பிரச்சனை செய்த காவி வேட்டி அணிந்த யாசகரை, பொதுமக்கள் அடித்து உதைத்து கைகளை கட்டி வைத்திருந்தனர்.

இப்படி போதை ஆசாமிகளின் ஆட்டம் கிரிவலப் பாதையில் அடிக்கடி நடைபெறுகிறது. உள்ளூர் கஞ்சா போதை ஆசாமிகளின் அட்டகாசம் நடந்த நிலையில் தற்போது வெளிநாட்டினர் ஒருவர் போதையில் ரகளையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையை மறைக்க அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிற தகவலை போலீஸ் சொல்லி வருகிறது என்கின்றனர் பலர்.

திருவண்ணாமலையில் வெளிநாட்டினர் அதிகளவில் பக்தியாக வருவது வழக்கம். கடந்த ஜனவரி மாதத்துக்கு பின்னர் அதிகளவில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து நாட்டிலிருந்து வருகின்றனர். இவர்கள் இங்கு வந்து 6 மாதம், ஒரு வருடம் என தங்குகின்றனர். சுற்றுலா விசாவில் வந்தவர்கள் சத் சங்கம் என்கிற பெயரில் சம்பாதிக்கின்றனர்.

விடுதியில் தங்கியிருந்த ஒரு ரஷ்யா பெண்ணை, போதை பவுடர் அதிகமாக தந்து மயக்கமாக்கி இரண்டு நாட்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து இரண்டு ஆண்டுக்கு முன்னர் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சில வெளிநாட்டினர் மர்ம மரணமும் நடைபெற்றுள்ளது. வெளிநாட்டினர் இங்கு ஆன்மீகம், தியானம், சுற்றுலா, அமைதியான வாழ்க்கை என வந்து தங்கினாலும் சிலர் இப்படி போதைக்கு அடிமையாகிறார்கள்; அடிமையாக்கப்படுகிறார்கள். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை மனநலம் பாதிப்பு என திசை திருப்புகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு இந்தியாவிற்குள் நுழைய இந்திய தூதரகம் எப்படி விசா வழங்கியது? என்கிற கேள்வி எழுகிறது. திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சொல்வதுபோல் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இந்திய வெளியுறவுத்துறை இந்தியாவுக்குள் அனுமதிக்கிறது என்றால் இந்தியாவின் பாதுகாப்பு எந்தளவுக்கு உள்ளது என்கிற கேள்வி எழுகிறது? இதற்கு யார் பதில் சொல்வார்கள்? என சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT