ADVERTISEMENT

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்; துணை முதல்வரானார் அஜித் பவார்!

03:02 PM Jul 02, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.

இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவிந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது. இதனையடுத்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி பாஜகவிற்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

இதனிடையே ஒரே கூட்டணியில் இருந்தாலும் பாஜவினர் ஏக்நாத் ஷிண்டே அணியினரை மதிப்பதே இல்லை. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர் என்று கட்சியின் முக்கிய தலைவர்கள் புலம்பி வருகின்றனர். ஷிண்டே தரப்பில், 22 எம்.எல்.ஏ.,க்களும், 9 எம்.பிக்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் உத்தவ் தாக்கரே பக்கம் வரவுள்ளதாகவும் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னா கட்டுரை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும், சர்த் பவாரின் மகனுமான அஜித் பவார் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளார். அவருடன் 8 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

அண்மையில் சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே மற்றும் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் ஆகிய இருவரையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் தனக்கு பதவி கொடுக்காத அதிருப்தியில் இருந்த அஜித் பவார் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT