ADVERTISEMENT

அதிமுக விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

12:51 PM Apr 27, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டது. தன்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை சிவில் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்று சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார். சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்ய வேண்டும் அதில் குளறுபடிகள் இருக்கிறது என செம்மலை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் செம்மலை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கிடையில் இந்த உத்தரவுக்கு எதிராக யாராவது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி தற்போது சசிகலா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சசிகலாவை நீக்கியது ஓபிஎஸ்-எடப்பாடி பழனிசாமி ஒன்றாக இணைந்திருந்த நேரத்தில் நிகழ்ந்த ஒன்று. தற்போது அதிமுகவில் ஓபிஎஸ் எடப்பாடி என அணிகள் பிரிந்து கிடக்கிறது. ஓபிஎஸ் சசிகலா மற்றும் டி.டி.வி ஆதரவை கோரும் நோக்கில் செயல்படுவதாக கூறப்படும் நிலையில் சசிகலா தாக்கல் செய்துள்ள கேவியட் மனு மேலும் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT