ADVERTISEMENT

மது வியாபாரம் ஒரு அருவருப்பான வர்த்தகம்! விதிகளைப் பின்பற்றி வேளாண் நிலங்களில் டாஸ்மாக்!- உயர்நீதிமன்றம் அனுமதி!

03:53 PM Dec 15, 2019 | santhoshb@nakk…

சட்ட பூர்வமாக எந்தத் தடையும் இல்லாததால், வேளாண் நிலங்களில் உள்ள கட்டிடங்களில் விதிகளைப் பின்பற்றி டாஸ்மாக் கடைகளை அமைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி தாலுகாவில் உள்ள மயிலம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த மல்லசாமி நாச்சிமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு, வேளாண் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை மூடும்படி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது, இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் உள்ள வேளாண் நிலங்கள் மறுவரையறை செய்யப்படுவதாகவும், அந்த அடிப்படையில் வேளாண் நிலங்களில் மதுபானக் கடைகள் அமைக்க எந்தச் சட்டமும் தடை செய்யவில்லை என்றும, கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவை இதுபோல வேளாண் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சாஹி தலைமையிலான அமர்வு, மது வியாபாரம் ஒரு அருவருப்பான வர்த்தகம் எனத் தெரிவித்தது. அதேசமயம், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க எந்தச் சட்டமும் தடை செய்யாத நிலையில், விதிகளைப் பின்பற்றி கடைகளை அமைக்க அனுமதியளித்து உத்தரவிட்டது.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT